- 17 October, 2025
பீகார் | அக்டோபர் 15, 2025:
பீகார் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நிபுணர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட தேர்தல் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கட்சியின் "யுக்தி" மற்றும் "நிலைப்பாடு" ஆகியவற்றைப் பற்றி நுணுக்கமாக ஆய்வு செய்து வருகின்றனர். வரவிருக்கும் வாரங்களில், நம் அண்டை வீட்டுக்காரர் முதல் கல்லூரி செல்லும் நம் அண்ணன்/அக்கா மகள் வரை அனைவரும் ஒரு தேர்தல் ஆய்வாளராக மாறுவார்கள். இந்த எல்லாப் பேச்சுக்களுக்கும் மத்தியில், ஒரு முக்கியமான பிரச்சினை மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது— அது 12 எழுத்துக்களைக் கொண்ட (ஆங்கிலத்தில்) ஒரு வார்த்தை, அதற்கு உரிய கவனம் கிடைப்பதே இல்லை: அதுதான், வேலையின்மை (Unemployment).
கௌதம் சர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன் இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன், ஒரு இணையதள வாகன சேவை நிறுவனத்திற்காக கார் ஓட்டுகிறார். "நான் இதைச் செய்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை," என்று அவர் கூறுகிறார். "நான் ஒரு வலைதள ஆய்வாளராக (web analyst) இருக்க விரும்பினேன். நான் பி.டெக் பட்டமும் பெற்றேன், ஆனால் கல்லூரி வளாகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என் முதல் வேலை வாடகை மற்றும் அடிப்படைச் செலவுகளை மட்டுமே ஈடு செய்தது. இப்போது நான் கார் ஓட்டுவதன் மூலம் மாதம் சுமார் ₹40,000 சம்பாதிக்கிறேன்—இது முன்பு இருந்ததை விட அதிகம்."
இந்தியா தனது மிகக் கடுமையான சவால்களில் ஒன்றை எதிர்கொள்கிறது—அது கல்வியறிவு பெற்றவர்களின் வேலையின்மை (unemployment of the educated). 2017-ஆம் ஆண்டில், இராஜஸ்தானில் 18 அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு, பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பட்டயக் கணக்கறிஞர் (Chartered accountants) உட்பட 12,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 2024-ஆம் ஆண்டளவில், ஹரியானாவில் ஒப்பந்த அடிப்படையிலான சுகாதாரப் பணிகளுக்கு 46,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதைக் கவனியுங்கள்: ஒரு மாணவர் ஒரு முதன்மையான அரசுக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் கிட்டத்தட்ட ₹10 லட்சம் செலவழித்து, பட்டம் பெற்ற பின்னரும் வேலை இல்லாமல் இருக்கிறார். 2024-ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்றவர்களில் ஐந்தில் இருவர் வேலை கிடைக்காமல் இருந்தனர். இந்த முறை என்.ஐ.டி-கள், ஐ.ஐ.ஐ.டி-கள் மற்றும் பிற உயர்தர நிறுவனங்களுக்கும் இந்நிலை நீள்கிறது. அரசாங்கத் தரவுகள் என்ன காட்டுகின்றன என்றால், கடந்த ஆண்டு பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளில் பத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்—பெண்களில் ஐந்தில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும், 70-80 லட்சம் இளம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு பணியில் இணைகின்றனர். ஆனால், கண்ணியமான ஊதியம் தரும் வெள்ளை கலுத்துப்பட்டை (white-collar) வேலைகள் எங்கே இருக்கின்றன? பெருநிறுவன இலாபங்கள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைத் தொட்டாலும், நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைத்து வருகின்றன. மூன்று முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் சுமார் 64,000 வேலைகளைக் குறைத்துள்ளன. இந்தியாவின் முதல் நான்கு நிறுவனங்களில் நிகர வெள்ளை கழுத்துப்பட்டை வேலையின் வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
ஒரு வேலைவாய்ப்பு தளம், ஐந்து பொறியியல் பட்டதாரிகளில் நால்வர் மற்றும் கிட்டத்தட்ட பாதி வணிகம் கற்கும் மாணவர்களுக்கு (MBA) பயிற்சிக்கான (Internship)வாய்ப்பு கூட கிடைப்பதில்லை என்று தெரிவிக்கிறது. முதன்மையான நிறுவனங்களில் ஒரு கோடி பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் திட்டத்தில், விண்ணப்பதாரர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே வாய்ப்புக் கிடைக்கிறது.
அதிகாரப்பூர்வமாக, வேலையின்மை விகிதம் சுமார் 4-6 சதவீதம் வரை உள்ளது. இருப்பினும், வேலை இல்லாதவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் படித்த இளைஞர்கள் ஆவர். 50 முன்னணி பொருளாதார வல்லுநர்களிடம் ராய்ட்டர்ஸ் நடத்திய ஒரு ஆய்வில், 70 சதவீதத்தினர் அரசாங்கத்தின் வேலையின்மை தரவு நெருக்கடியை குறைவாக மதிப்பிடுகிறது என்று நம்புகின்றனர்—இதற்கு முக்கியக் காரணம், வாரத்திற்கு ஒரு மணி நேரம் வேலை செய்பவர் கூட "வேலையில் இருப்பவர்" என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் (Periodic Labour Force Survey - PLFS) கணக்கிடப்படுகிறார்கள்
படித்தவர்களின் வேலையின்மை ஊதியங்கள் தேக்கமடைந்ததற்கும் ஒரு காரணமாக அமைகிறது. ஒரு முன்னணி மனிதவள அதிகாரி (HR officer) பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: புதிய பட்டதாரிகளின் ஆண்டுச் சம்பளம் பல ஆண்டுகளாக ₹3-4 லட்சம் என்ற அளவிலேயே தேங்கிக் கிடக்கிறது. 2020-ஆம் ஆண்டில், சராசரியாக பொறியாளர் ஒருவர் மாதம் ₹33,000 ஈட்டினார். பொருளாதார ஆய்வறிக்கை 2025 (Economic Survey 2025) ஆனது சம்பளம் பெறும் ஆண்கள் ஒரு நாளைக்கு ₹395-ம், பெண்கள் ₹295-ம் சம்பாதிப்பதாகக் காட்டியது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட FICCI அறிக்கை, 2019 மற்றும் 2023-க்கு இடையில் முக்கியத் துறைகளில் மந்தமான ஊதிய வளர்ச்சியைக் காட்டியது: தகவல் தொழில்நுட்பம் (4% CAGR), வங்கி மற்றும் நிதி (2.8%), மற்றும் உற்பத்தி (0.8%). அதிகத் திறன் கொண்ட நிபுணர்களிடையே கூட, 2020 மற்றும் 2023-க்கு இடையில் பெயரளவு (nominal) சம்பள வளர்ச்சி சராசரியாக 5% மட்டுமே இருந்தது—ஆனால் இந்தக் காலத்தில் பணவீக்கம் (inflation) 18% உயர்ந்தது.
இந்த நெருக்கடி ஒரு சோகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் நேரிட்ட விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 12,000-க்கும் மேற்பட்ட தனியார் துறை ஊழியர்களும், 14,000 வேலையில்லாதவர்களும் தற்கொலை செய்து கொண்டனர்—அதாவது, ஒவ்வொரு நாளும் 73 உயிர்கள் பலியாகியுள்ளன.
பிற்சேர்க்கை (PS): Homebound என்கிற திரைப்படத்தைப் பாருங்கள்—இது நீரஜ் கெய்வான் இயக்கிய ஒரு சிறந்த படம், கிராமப்புற வட இந்தியாவிலிருந்து வேலை மற்றும் கண்ணியத்தைத் தேடும் இரண்டு சிறுவர்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
மூலம்: Indian Express
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP