- 17 October, 2025
நட்டாலம் | அக்டோபர் 16, 2025:
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மறைமாவட்டத்தில் ‘மறைச்சாட்சி புனித தேவசகாயம் - இந்தியாவின் பொதுநிலையினர் பாதுகாவலர்’ என்ற வத்திக்கான் அறிவிப்பின் நன்றிக் கொண்டாட்டம் குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் அவர்கள் தலைமையில் நட்டாலத்தில் நடைபெற்றது. இந்த நன்றித் திருப்பலியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பரிந்துரையை ஏற்று, கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாடு மற்றும் அருளடையாள ஒழுங்குசார் பேராயம், குழித்துறை மறைமாவட்ட மண்ணின் மைந்தர் புனித தேவசகாயத்தை இந்தியவின் பொதுநிலையினரின் பாதுகாவலராக அங்கீகரித்துள்ளது. நேற்று (15.10.2025) வாரணாசியில் இந்திய பொதுநிலையினர் பணிக்குழுவின் ஆண்டுக் கூட்டத்தின்போது மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் திருத்தந்தை லியோவின் அதிகாரப்பூர்வமான ஆணை அறிவிக்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியின் செய்தியை அறிவித்து, கொண்டாடி மகிழ்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில், குழித்துறை மறைமாவட்ட அளவில் புனித தேவசகாயம் பிறந்த இடமான நட்டாலத்தில் வைத்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் அவர்கள் சிறப்பு நன்றித் திருப்பலி நிறைவேற்றினார். குழித்துறை மறைமாவட்ட பொதுநிலையினர் பணிக்குழுவினர் இத்திருப்பலியைச் சிறப்பித்தனர்.
இந்த சிறப்பு நிகழ்வை அடையாளப்படுத்தும் விதமாக திருத்தல மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல்லை ஆயர் அவர்கள் அர்ச்சித்தார்கள். அனைத்து நிகழ்வுகளையும் திருத்தல அதிபர் அருள்பணி. R. பால் ரிச்சர்ட் ஜோசப் மற்றும் மறைமாவட்ட திருவழிபாட்டு பணிக்குழுவின் செயலர் அருள்பணி. Vஆன்றூஸ் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்.
நன்றி: நம் வாழ்வு
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP