image

கேரளாவின் நெய்யாற்றின்கரை ஆயர் வின்சென்ட் சாமுவேல் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை

புது டெல்லி | அக்டோபர் 18, 2025:


நம் திருத்தந்தை 14ம் லியோ அவர்கள், நெய்யாற்றின்கரை மறைமாவட்டத்தின் ஆயர் பணியிலிருந்து வின்சென்ட் சாமுவேல் அவர்களின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால அவரது அர்ப்பணிப்புள்ள ஆயர் பணி நிறைவடைகிறது.


ஆயர் வின்சென்ட் சாமுவேல் அவர்கள், 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் கேரளத்தின் அரயூரில் பிறந்தவர். 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பல ஆண்டுகளாக, அப்போதைய பிரிக்கப்படாத திருவனந்தபுரம் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் அவர் பணியாற்றினார். இறையியலில் அவருக்கிருந்த ஆழமான நுட்பத்திற்காக நற்பெயர் பெற்றார்.


உயர் படிப்பைத் தொடர ரோம் நகரில் உள்ள Pontifical Urban University -ல் சேர்ந்து, 1987 ஆம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் (Systematic Theology) முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய அவர், ஆலுவாவில் உள்ள புனித சூசையப்பர் பாப்பிறை குருத்துவக் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர், 1994 இல் அதன் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.


ஆயர் வின்சென்ட் சாமுவேல் அவர்களின் வாழ்க்கை, 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் நாள் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை அடைந்தது. அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், திருவனந்தபுரம் மறைமாவட்டத்தைப் பிரித்து நெய்யாற்றின்கரை மறைமாவட்டத்தை நிறுவினார். அவரது பணி ஆர்வம் மற்றும் கல்விச் சிறப்பைக் கருத்திற்கொண்டு, திருத்தந்தை அவர்கள் அவரை புதிதாக உருவாக்கப்பட்ட மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.


கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, ஆயர் சாமுவேல் அவர்கள் "பணிசெய்வதும், மீட்பதுமே" ("To serve and save") என்ற தனது ஆயர் பணி குறிக்கோளின் வழிகாட்டுதலோடு, அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்புடன் நெய்யாற்றின்கரை மறைமாவட்டத்தை வழிநடத்தினார்.

அவரது தலைமையின் கீழ், மறைமாவட்டமானது விசுவாசம் மற்றும் சமூகப் பணி இரண்டிலும் சீரான வளர்ச்சியை அடைந்தது. ஆயர் சாமுவேலின் இறையியல் நுண்ணறிவும், அன்புள்ள தலைமைத்துவமும் குருக்கள், துறவிகள், மற்றும் பொது நிலையினர் என அனைவருக்கும் நற்செய்திக்குச் சாட்சியமளிக்க உத்வேகம் அளித்தது.


ஆயர் வின்சென்ட் சாமுவேல் அவர்கள் தனது ஆயர் பணியிலிருந்து விலகும் இந்த வேளையில், அவரது சேவை, கல்விப் புலமை மற்றும் கடவுளுக்கும் மக்களுக்கும் செய்த தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் பாரம்பரியம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டத்தின் கட்டமைப்பில் ஆழமாகப் பின்னப்பட்டுள்ளது.


மூலம்: CBCI

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP