image

இளம் கருத்தாளர்களை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம்

திருச்சி | அக்டோபர் 14, 2025:


தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் முன்னெடுப்பான "மாற்றம் நோக்கி 100 கருத்தாளர்கள்" என்கிற, இளைஞர்களை கருத்தாளர்களாக உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது நேரடி அமர்வு கடந்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் (அக்டோபர் 11,12) நடைபெற்றது. Sisters of Charity (SCCG) சபையின் தென்கிழக்கு இந்திய மாகாணத்தின் தலைமையகமான மரியகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 36 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் ஒரு அங்கமாக தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் விளங்குகிறது. இந்த இயக்கத்தின் கருத்தாளர் குழு இளைஞர்களை அரசியல்படுத்தி சிறந்த கருத்தாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் "மாற்றம் நோக்கி 100 கருத்தாளர்கள்" என்ற தலைப்பில் பயிற்சிகள் வழங்கி வருகிறனர். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் இணைய வழியில் நடைபெறும் இந்த பயிற்சியின் இரண்டாவது நேரடி அமர்வு கடந்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் (அக்டோபர் 11,12) நடைபெற்றது.


முதல் நாளில்,


தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (Tamilnadu Catholic Youth Movement - TCYM) இலக்கு பாடலான 'பொது இலக்கு கனவெடுத்து' எனும் பாடலுடன் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. பிறகு இயக்கத்தின் இயக்குனரான பணி. கும. எடிசன் அவர்கள் இந்த இரண்டு நாள் அமர்வுகளுக்கான நோக்கவுரை வழங்கினார்.


'அம்பேத்கரின் பார்வையில் சமூக நீதி' என்ற தலைப்பில் முதல் அமர்வினை புனித பவுல் குருத்துவ கல்லூரியின் பேராசிரியரான பணி. உ. செகன் போசு அவர்கள் வழிநடத்தினார். மக்களாட்சித் தத்துவத்தைக் காப்பது, மக்களாட்சியில் ஒடுக்கப்பட்டவர்களின் பங்கை உறுதி செய்வது ஆகிய இரண்டும் இந்த அமர்வின் நோக்கமாகும். கருத்துரையின் தொடக்கத்தில் 'நீதி' என்பது வடமொழிச் சொல் அதற்குப் பதிலாக 'நயன்மை' எனும் தமிழ்ச் சொல்லை நாம் பயன்படுத்தலாம் என்று கூறினார்.


அம்பேத்கரின் வாழ்க்கை பற்றி செல்வி லாவண்யா அவர்கள் பேசினார். பிறகு அனைவரும் குழுக்களாக பிரிந்து சமூக நயன்மையின்மைக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைப் பற்றி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமூகம் என்றால் என்ன என்று கூறி நயன்மைக்கான விளக்கத்தையும் எடுத்துரைத்த பின்னர் கருத்தாளர் பயிற்சி பெறும் இளைஞர்களையே சமூக நயன்மை என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வைத்தார்கள்.


" சமூக நயன்மை என்பது இரக்கம் சார்ந்தது, அல்ல அது உரிமை சார்ந்தது. மேலும் இது தனி மனிதனின் பொறுப்பல்ல, அரசின் கடமை" என்று பணி. செகன் அவர்கள் கூறினர். பிறகு அம்பேத்கரின் பார்வையில் சமூக நயன்மை, அரசியல், சமூக, பொருளாதார நயன்மை பற்றி கருத்துரை வழங்கப்பட்டது.


அடுத்த அமர்வில் சூழலியலுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் "பூவுலகின் நண்பர்கள்" இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களோடு இணைந்து நாம் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் கூறி இளம் கருத்தாளர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு இளைஞர் பணிக்குழுவின் மாத இதழான 'துடிப்பு' பற்றிய விமர்சனத்தை இளம் கருத்தாளர்கள் எழுதி சமர்ப்பித்தனர்.


மாலை அமர்வில் "சாதியற்ற தமிழ்ச் சமூகம், சாதியத் தமிழ்ச் சமூகம்" என்ற தலைப்பில் பணி. கும. எடிசன் அவர்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு சாதி ஊடுருவியது என்றும் சாதியற்ற தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் இன்றைய அவல நிலை குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் அனைவரும் செபமாலை செபித்து முதல் நாள் நிகழ்வினை நிறைவு செய்தனர்.


இரண்டாம் நாள்,


காலைத் திருப்பலியுடன் இரண்டாம் நாள் அமர்வுகள் தொடங்கின. திருப்பலியின் போது அனைவரும் கரம் கோர்த்து சமூக நயன்மைக்கான உறுதிமொழியை ஏற்றனர்.


"காவிமயமாகும் நீதித்துறை" எனும் தலைப்பில் வழக்கறிஞரான பணி. சவரிமுத்து அவர்கள் கருத்துரை வழங்கினார். "அமைதியானவர்கள், ஆபத்தானவர்கள். அநீதியின் போது அமைதியாக இருந்தால் நீங்களும் அந்த அநீதிக்கு துணை போகிறீர்கள்" என்ற மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி இன்றைய சூழலில் மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறை எவ்வாறு மக்களாட்சி கோட்பாட்டிற்கு எதிராக செயல்படுகிறது என்பது பற்றி விளக்கினார். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்து அதனை உயர்த்தி பிடிப்பதற்கான தேவை பற்றியும் எடுத்துரைத்தார்.


"எந்தவித ஊடகங்களின் கருத்து திணிப்பையும் ஏற்காமல் ஒரு நிகழ்வினைப் பற்றி சுயமாக சிந்தித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு கருத்தாளர் பயிற்சி பெறும் இளைஞர்கள் உருவாக வேண்டும். அதற்கு தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும்" என்று பணி. சவரிமுத்து அவர்கள் கருத்துரையில் கூறினார்.


தொடர்ந்து இரண்டு நாள் பயிற்சிகள் குறித்த திறனாய்வு தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்க தலைவர் செல்வன் ஜெரிஸ் அவர்களால் நடத்தப்பட்டது. அடுத்த கூட்டம் பற்றிய கலந்துரையாடலுக்குப் பிறகு "மீண்டும் மீண்டும் எழுவோம்" எனும் இயக்க பாடலோடு பயிற்சி நிறைவுற்றது.


இந்த பயிற்சிக்கான அரங்கம், தங்குமிடம், உணவு ஆகியவற்றை தாராள மனதோடு வழங்கிய Sisters of Charity (SCCG) சபையின் தென்கிழக்கு இந்திய மாகாணத்தின் தலைமைச் சகோதரியான சகோ. லொரேட்டா செசிலியா ரொசாரியோ அவர்களுக்கும், உடனிருந்த அனைத்து சகோதரிகளுக்கும், MSFS சபையின் மறைமாநில தலைமையகத்திற்கும், பணி. பேட்ரிக் அவர்களுக்கும் பணி. கும. எடிசன் அவர்களுடன் இணைந்து பங்கேற்ற அனைத்து இளம் கருத்தாளர்களும் நன்றி தெரிவித்தனர்.


செய்தியாளர்: அபிசேக் ராஜா

செயற்குழு உறுப்பினர் - தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம்.

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP