image

புனித தோமையார் தேசியத் திருத்தலப் பேராலயத்தின் விவிலிய நகரம் (Bible Town): விவிலியக் கண்காட்சி

சென்னை அக்டோபர் 21, 2025:


விவிலிய நகரம் (Bible Town) என்ற தலைப்பில் விவிலியக் கண்காட்சி புனித தோமையார் தேசியத் திருத்தலப் பேராலயத்தில் 19.10.2025 ஞாயிற்று கிழமை காலை 8.15 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற்றது. அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால் பேராலயத்திற்கு வருகைப் புரிகின்ற பக்தர்கள் பார்த்து பயனடையும் பொருட்டு 20.10.2025 ஆம் நாள் திங்கள் மாலை வரை விவிலியக் கண்காட்சி மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.


யூபிலி 2025ஆம் ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்கள் விவிலிய மாதத்தில் விவிலியத்தினுள் ஒரு பயணம் மேற்கொள்ளக் கூடிய அனுபவத்தை இறைமக்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் "விவிலிய நகரம் : மீட்பின் பாதயிைல் ஒரு பயணம்” என்ற தலைப்பில் ஆலய வளாகத்தில் விவிலயக் கண்காட்சி ஒன்றினை அமைக்க பங்குத் தந்தை அருட்பணி. வின்சென்ட் சின்னதுரை அவர்களது தலையில் பேரலயத் தந்தையர்கள் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்களால் முடிவெடுக்கப்பட்டது.


அதன்படி படைப்பு வீதி (Creation Street), மூதாதையர் வழி, (Patriarch Avenue ), விடுதலை சதுக்கம் (Exodus Square), வாக்களிக்கப்பட்ட நிலம் (Promised Land ), இறைவாக்கினர்கள் அரங்கம் (Prophets’ Plaza), ஞானத் தெரு (Wisdome Lane), நற்செய்தித் தெரு (Gospel Street), திருத்தூதர்கள் வீதி (Apostles' Road), திருஅவை மரபு வீதி (Church Tradition Turn), திருவெளிப்பாடுக் கூடம் (Revelation Corner) என்ற தலைப்புகளில் மொத்தம் பத்து அரங்குகள் அமைக்கப்பட்டன.


ஒவ்வொரு அரங்கமும், இரண்டு வட்டங்களின் (Zone) பொறுப்பில் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வட்டங்களைச் சார்ந்த அன்பியத்தில் உள்ள இறைமக்கள் ஒன்றாய் இணைந்து அந்தந்த தலைப்புகளுக்கேற்ப மாதரிகள், காட்சிப் பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து காட்சிப் படுத்தினர். பேராலயத்தில் உள்ள நல்ல சமாரியன் குழுவினர் விவிலியத்தில் இடம்பெற்றுள்ள அப்பம், திராட்சை இரசம், அத்திப்பழம், பேரிச்சை முதலிய உணவுப்பொருட்களை மையப்படுத்தி நல்ல சமாரியன் உணவகம் ஒன்றையும் அமைத்திருந்தனர்.


இறைமக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்திடாமல், கண்காட்சியில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு பங்கேற்பாளர்களாகவும் மாற, ஒவ்வொரு அரங்கிற்கும் விவிலிய விளையாட்டுக்கள், மற்றும் வினாடி-வினா போன்றவை பேராலய மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் நடத்தப்பட்டது.


மேலும் வின்சென் தெ பவுல் சபையினரால் ஆலய அரங்கத்தில் பெரிய திரை ஒன்று அமைக்கப்பட்டு இறைமக்கள் பார்த்து ரசிக்க விவிலய குறும்படங்களும் திரையிடப்பட்டன. விவிலயக் கண்காட்சி காலை 8.15 மணிக்கு பேராலயப் பங்குத்தந்தை அருள்பணி. வின்சென்ட் சின்னதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அரங்குகள் ஒவ்வொன்றும் அருட்பணி. D.J. சகாயராஜ் (St. Bede's பள்ளியின் அதிபர்), மற்றும் அருட்பணி. ஜான் மோசஸ் (பேராலய உதவிப் பங்குத்தந்தை) அவர்களால் மதிப்பிடப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.


பங்கு இறைமக்கள் மட்டுமல்லாமல், வெவ்வேறு இடங்களிலிருந்து பேராலயத்திற்கு திருப்பயணிகளாக வருகை தந்த இறைமக்கள், பிற சமய, சபைகளைச் சார்ந்த மக்கள் என அனைவரும் விவிலயக் கண்காட்சியைக் கண்டு பயனடைந்து, விவிலிய விளையாட்டுக்களில் பங்கெடுத்து பரிசுகளை வென்று மகிழ்ந்து, விவிலிய உணவகத்தில் உண்டு களித்து, குறும்படங்களைப் பார்த்து ரசித்தும் சென்றனர்.


"Bible Town" என்ற விவிலயக் கண்காட்சி சிறப்புற அமைந்திட தங்குளுடைய ஒத்துழைப்பையும், உடலுழைப்பையும், பொருளுதவியையும் மனமுவந்து கொடுத்த அன்பிய இறைமக்களுக்கும், பங்கின் இளையோருக்கும், பக்தசபைகளுக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


"விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்” - புனித ஜெரோம்


செய்தியாளர்: Catholic Connect Reporter

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP