image

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி போளூர் - சேத்துப்பட்டு இடையே மாபெரும் மிதிவண்டிப் பேரணி: YOSA மற்றும் விண்ணரசி கம்யூனிகேஷன் முன்னெடுப்பு

போளூர், செப்டம்பர் 7, 2026: வேலூர் மறைமாவட்ட இளைஞர் சமூகப் பணிக்குழு (YOSA) மற்றும் விண்ணரசி கம்யூனிகேஷன் இணைந்து, “சிறந்த நாளைக்காக – தாய் பூமியை பாதுகாப்போம்” என்ற உன்னத நோக்கத்துடன் நடத்திய மாபெரும் மிதிவண்டிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை (06 செப்டம்பர் 2026) வெற்றிகரமாக நடைபெற்றது.


இயற்கை வளங்களின் முக்கியத்துவம், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் நிலையான வாழ்வியல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.


இப்பேரணி காலை 9.30 மணிக்கு போளூர் டான் போஸ்கோ பள்ளியிலிருந்து தொடங்கியது. பல்வேறு பங்குகள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியவாறும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டவாறும் பயணித்த இப்பேரணி, மாலை 6.00 மணிக்கு சேத்துப்பட்டு லூர்து அன்னை திருத்தலத்தை அடைந்து நிறைவுற்றது.


பயண வழியில் நீர்வளப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக கரைப்பூண்டி ஆற்றிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தேவிகாபுரத்தில் பொதுமக்களைக் கவரும் வகையில் பாரம்பரிய தெருக்கூத்து கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பசுமையான எதிர்காலத்திற்கான உறுதிமொழியை வெளிப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


இந்நிகழ்வில் பேசிய ஏற்பாட்டாளர்கள், படைப்பைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், சிறிய முயற்சிகளே பெரும் மாற்றங்களுக்கு வித்திடும் என்றும் குறிப்பிட்டனர். பங்கேற்ற இளைஞர்கள் தங்களது பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.


“மாற்றமாக இருங்கள் – நம் பூமியைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்பேரணி அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


- தானியேல் சர்மா

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP