- 03 April, 2026
புனித வியாழன் என்பது அன்பின் உச்சம் வெளிப்படும் திருநாள். அந்நாளில் இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவியதும், தம்மையே உணவாக அளித்ததும், முழுமையான தியாகத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. ஒரு உண்மையான தலைவர் எவ்வாறு பணிவுடன் சேவை செய்கிறார் என்பதையும், அன்பின் மூலம் மற்றவர்களை உருவாக்குகிறார் என்பதையும் இந்நாள் நமக்கு கற்றுத் தருகிறது. இந்த தியானத்தை மூன்று நிலைகளில் சிந்திக்கலாம்:
தன்னை அறிந்திட
இயேசு தமது அடையாளத்தையும், தம்முடைய பணி நோக்கத்தையும் தெளிவாக அறிந்திருந்தார். அந்த தெளிவை வழங்கியது அவரது ஆழ்ந்த செப வாழ்வே. தலைவர்களின் வரலாற்றில் பலர் புகழுடன் வாழ்ந்திருக்கலாம்; ஆனால் தம்முடன் நடந்த சீடர்களின் பாதங்களை கழுவிய தலைவர் ஒருவரே — இயேசு. தன்னை அறிந்தவர் தான் தாழ்மையாகத் தாழ்ந்து பணியாற்ற முடியும். நாமும் நம்மை ஆராய்ந்து பார்ப்போம்: என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என் அழைப்பு என்ன? நான் பணிவுடன் சேவை செய்கிறேனா? தன்னை அறிதல், உண்மையான மாற்றத்தின் தொடக்கம்.
தன்னலம் துறந்திட
அன்பின் உச்சம் தியாகம்.
இயேசு தம்முடைய சீடர்களை முடிவுவரை அன்பு செய்தார். தம்மையே உடலாகவும் இரத்தமாகவும் அளித்தார். அவர் பலியாகவும் பலிபீடமாகவும் ஆனார். இன்றைய உலகில் “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற சிந்தனை அதிகம். ஆனால் புனித வியாழன் நமக்கு “நான் என்ன கொடுக்க முடியும்?” என்று கேட்கச் செய்கிறது.
தன்னலம் துறந்தால் தான், குடும்பத்தில் சமாதானம், சமூகத்தில் ஒற்றுமை, உலகில் அமைதி, நாம் அனுபவிக்கும் அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.
தரணியைக் காத்திட
இன்றைய உலகின் அமைதியின்மை பெரும்பாலும் மனிதனின் தன்னல ஆசைகளால் உருவாகிறது.
இயேசு தமது வாழ்க்கையை மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்தார். அவர் வாழ்ந்தது தன்னிற்காக அல்ல, உலகிற்காக.
நாமும், இயற்கையை பாதுகாக்க, பிறரின் உரிமையை மதிக்க, அமைதியை வளர்க்க, அன்பை விதைக்க அழைக்கப்படுகிறோம்.
அன்பின் இறைவா,
தன்னை அறியும் ஞானத்தையும், தன்னலம் துறக்கும் மனதையும், உலகை காக்கும் பொறுப்புணர்வையும் எமக்குத் தந்து அருளும். புனித வியாழன் அன்பின் வழியாக எங்கள் வாழ்வை மாற்றும் நாளாக அமையச் செய்தருளும்
ஆமென்.
- அருள்பணி K.அருள் ஜேசுதாஸ்,
செயலர், திருவழிபாட்டுப் பணிக்குழு,
சென்னை மயிலை உயர்மறை மாவட்டம்
அலைபேசி எண் :+91 97899 85013
k.aruljesudoss@gmail.com
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP