- 01 April, 2026
சென்னை, ஏப்ரல் 01, 2026: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழ்நாட்டில் வெப்பம் மற்றும் வெப்பஅலை (Heatwave) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் பகல் வெப்பநிலை சில இடங்களில் சாதாரணமாக இருந்தாலும், பல பகுதிகளில் அதிகமாக இருக்கும். இரவு வெப்பநிலையும் (குறைந்தபட்சம்) வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் இரவிலும் வெப்பத்தை அதிகமாக உணரக்கூடும்.
முக்கியமாக, சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வெப்பஅலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்று IMD கூறியுள்ளது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்லும் போது அதிக கவனம் தேவை.
அதே நேரத்தில், மழைப்பொழிவு குறித்து ஒரு நல்ல தகவலும் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சாதாரணம் முதல் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து இடங்களிலும் சமமாக இருக்காது.
இந்த சூழ்நிலையில் மக்கள் எடுக்க வேண்டிய சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
- மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
-குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும்
-இலகுவான உடைகள் அணியவும்
மேலும் அனைவரும் அன்பும் பொறுப்பும் காட்ட வேண்டிய நேரம் இது. முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு தண்ணீர், ஓய்வு மற்றும் உதவி வழங்குவது மிகவும் அவசியம்.
இது நமது இறைவன் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த இயற்கையை பாதுகாக்கும் அழைப்பாகவும் பார்க்கப்படுகிறது. நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து, இந்த வெப்ப காலத்தை பாதுகாப்பாக கடக்க வேண்டும்.
- பிரிட்டோ ராஜ்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP