image

கர்தினால்களுடனான திருத்தந்தையின் கூட்டத்திற்கான அட்டவணையை வத்திக்கான் வெளியிட்டுள்ளது

வத்திக்கான், ஜூன் 24, 2026: புனித பேதுரு மற்றும் புனித பவுல் திருவிழாவிற்கு முன்னதாக, ஜூன் 26-27 தேதிகளில் நடைபெறவுள்ள கர்தினால்களின் சிறப்புப் பேரவைக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை திருப்பீடத்தின் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.


திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கர்தினால்களுடன் கூடும்போது, உலகை பாதிக்கும் மோதல்கள் மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக திருஅவை தனது மொழி மற்றும் அணுகுமுறைகள் மூலம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் மையப்படுத்தப்படும்.


ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூட்டியுள்ள இரண்டாவது கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இதன் முந்தைய கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 170 கர்தினால்கள் கலந்து கொண்டனர்.


அந்தக் கூட்டத்தின் முடிவில், ஜூன் மாதக் கூட்டத்தை அறிவித்த திருத்தந்தை அவர்கள், கர்தினால்களிடம் “நான் உங்களை நம்பிக்கையுடன் சார்ந்து இருக்க வேண்டிய தேவையை உணர்கிறேன்” என்று கூறினார்.


திருப்பீடத்தின் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, இந்த நிகழ்வுகள் செபம், மௌனம், தனிப்பட்ட சிந்தனை, குழு விவாதம் மற்றும் முழுமையான அமர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய “மாமன்ற” (synodal) முறையைப் பின்பற்றும்.


கூட்டத்தின் போது நடைபெறும் விவாதங்கள் குறித்து ரகசியம் காக்குமாறும், சகோதரத்துவ பரிமாற்றத்தை பேணுவதற்காக கூட்டம் நடைபெறும் காலத்தில் பத்திரிகையாளர்களிடம் கருத்துக்களை தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும் கர்தினால்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


நான்கு சிந்தனை அமர்வுகள்

பங்கேற்பாளர்கள் 20 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். ஒன்பது குழுக்களில் பல்வேறு நாடுகளுக்கான திருப்பீடத்தின் தூதர்கள் உட்பட தற்போது பொறுப்பில் உள்ள கர்தினால்களும் தங்களது பணியை நிறைவு செய்த கர்தினால்களும் இருப்பார்கள்.


மீதமுள்ள பதினொரு குழுக்களில் உரோமை நிர்வாகத்தைச் சேர்ந்த கர்தினால்களும் வாக்களிக்க இயலாத கர்தினால்களும் இருப்பார்கள்.


ஒவ்வொரு குழுவிலும் விவாதத்தை நெறிப்படுத்தவும் நேரத்தைக் கண்காணிக்கவும் ஒரு தலைவரும், கருத்துக்களைத் தொகுத்து இறுதி அறிக்கையைத் தயாரிக்க ஒரு செயலாளரும் இருப்பார்கள்.


இந்த கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 வெள்ளிக்கிழமை அன்று, புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் தொடங்கும்.


அதன்பின் கர்தினால்கள் ஆறாம் பவுல் அரங்கிற்குச் சென்று தொடக்க அமர்வை நடத்துவார்கள். இது "வாரீர் படைத்திடும் தூய ஆவியே" என்ற பாடலுடன் தொடங்கும், அதனைத் தொடர்ந்து கர்தினால் ஜியோவானி பாட்டிஸ்டா ரீ அவர்களின் உரை மற்றும் திருத்தந்தை அவர்களின் அறிமுக உரை நடைபெறும்.


முதல் அமர்வு, “நாம் எந்த வகையான உலகில் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம்?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டிருக்கும். கிராகோவ் நகரின் பேராயர் கர்தினால் கிரிகோர்ஸ் ரைஸ் விவிலிய தியானத்தை வழங்குவார். தொடர்ந்து மௌனம், செபம், குழு பகிர்வு மற்றும் முழுமையான அமர்வில் அறிக்கைகள் வாசிக்கப்படும்.


வெள்ளிக்கிழமை பிற்பகல், இரண்டாவது அமர்வு “அதிகார கலாச்சாரம் மற்றும் அன்பின் நாகரிகம்” என்ற கருப்பொருளை ஆய்வு செய்யும். நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ், "மகத்தான மானுடம்'' (Magnifica humanitas) திருத்தூது மடலின் ஐந்தாம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருப்பொருளை அறிமுகப்படுத்துவார்.


பொது நலனைப் பேணுதல்

சனிக்கிழமை காலை, கர்தினால் ரீ தலைமையில் புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி முடிந்ததும், கர்தினால்கள் ஆறாம் பவுல் அரங்கில் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள்.


“நன்மையில் கட்டமைத்தல்: நமது காலத்தின் பணித்தளங்கள்” என்ற தலைப்பில் மூன்றாவது அமர்வு நடைபெறும். ஜோகன்னஸ்பர்க்கின் பேராயர் மற்றும் தென்னாப்பிரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் ஸ்டீபன் பிரிஸ்லின் இதனை அறிமுகப்படுத்துவார்.


இந்த விவாதம் பொது நலனை உருவாக்குவதைத் தடுக்கும் விரிசல்கள், மக்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து எழும் கேள்விகள் மற்றும் உள்ளூர் திருஅவைகளும் உலகளாவிய திருஅவையும் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து பேசும்.


நான்காவது மற்றும் இறுதி அமர்வு சனிக்கிழமை பிற்பகல் புதிய ஆயர் மாமன்ற அரங்கில் நடைபெறும். இது “மாமன்ற அனுகுமுறையை செயல்படுத்தும் பாதை” என்பதை மையமாகக் கொண்டிருக்கும். ஆயர் மாமன்ற பொதுச் செயலாளர் கர்தினால் மரியோ கிரெச், “2027-2028 மாமன்ற கூட்டங்களை நோக்கி: தயாரிப்பிற்கான நிலைகள், அளவுகோல்கள் மற்றும் கருவிகள்” என்ற ஆவணத்திலிருந்து இந்த கருப்பொருளை அறிமுகப்படுத்துவார்.


இந்த அமர்வில் தெளிவுபடுத்துவதற்கான கேள்விகள், திருத்தந்தை உடனான உரையாடல் மற்றும் தலா மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் சுதந்திரமான கருத்துக்கள் பகிரப்படும்.


திருத்தந்தை அவர்களின் நிறைவுரையுடன் இந்த கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டம் முடிவடையும். அதனைத் தொடர்ந்து 'தே தேயம்' (Te Deum) என்ற பாடல் பாடப்படும். பிறகு ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தை அவர்களுடன் இரவு விருந்து நடைபெறும்.


ஜூன் 29 திங்கட்கிழமை, திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் திருவிழாவிற்காக புனித பேதுரு பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியை திருத்தந்தை பதினான்காம் லியோ தலைமை தாங்கி நடத்துவார்.


Courtesy: Vatican News

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP