image

வத்திக்கான் - திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லம்

காஸ்தல் கந்தோல்போ

ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் தனது கோடை விடுமுறையைக் கழிக்க உரோமில் உள்ள காஸ்தல் கந்தோல்போ என்னும் இடத்திற்குச் செல்ல உள்ளார்.


அன்பு நேயர்களே இத்தாலியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் கோடை விடுமுறைக் காலமாகக் கொண்டாடப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பிட்ட நாள்களில் திருத்தந்தையர்களும் தங்களது விடுமுறையைக் கழிக்க உரோமில் உள்ள திருத்தந்தையர்களுக்கான கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போ செல்வது வழக்கம். அவ்வகையில் இந்த ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் தனது கோடை விடுமுறையைக் கழிக்க உரோமில் உள்ள காஸ்தல் கந்தோல்போ என்னும் இடத்திற்குச் செல்ல உள்ளார். எனவே அதனை முன்னிட்டு திருத்தந்தையின் ஜூலை மாத புதன் மறைக்கல்வி உரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இன்றைய நமது நிகழ்வில் திருத்தந்தை செல்ல இருக்கும் காஸ்தல் கந்தோல்போ குறித்த தகவல்களைக் காணலாம்.


திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமாகக் கருதப்படும் காஸ்தல் கந்தோல்போ (Castel Gandolfo) என்னும் இடம் உரோம் நகருக்குத் தெற்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏறக்குறைய 8,503 மக்களைக் கொண்ட ஒரு இத்தாலிய நகராட்சியான காஸ்தல் கந்தோல்போ, கடல் மட்டத்திலிருந்து 426 மீ உயரத்தில் அமைந்துள்ள மலைப்பாங்கான பகுதியாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தலைமைத்துவக் காலத்தில் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லத்தைப் பயன்படுத்தாதக் காரணத்தினால் அவ்வில்லமானது பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.


காஸ்தல் கந்தோல்போ சிறப்பு

17 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்ட பல கோடைகால குடியிருப்புகள், வில்லாக்கள் எனப்படும் தனி இல்லங்கள் மற்றும் குடிசை வீடுகளால் காஸ்தல் கந்தோல்போ பகுதி சூழப்பட்டுள்ளது. இதன் அருகில் அல்பானோ எனப்படும் அழகான ஏரி ஒன்றும் அமைந்துள்ளது. ஏறக்குறைய ஏரியின் கடலோர வளைவுகள் அனைத்தையும் ஒட்டிய பகுதிதாக காஸ்தல் கந்தோல்போ என்னும் இடம் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லம் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து காவோ மலையில் உள்ள எரிமலை கூம்பின் காட்சியையும், CONI ஒலிம்பிக் ரோயிங் அரங்கத்தையும் துல்லியமாக நம்மால் காண முடியும்.

அல்பானோ ஏரி மற்றும் டொமிஷியனின் அல்பன் வில்லாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் உட்பட பல்வேறு தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களும், இயற்கைச் சூழலை வெளிப்படுத்தும் கஸ்தெல்லி ரோமானி பூங்காக்கள், கலையார்வம் மிக்க வில்லானோவாவின் தூய தோமா திருப்பீடக் கல்லூரியும் இங்கு உள்ளன.


நிலப்பரப்பு

காஸ்தல் கந்தல்ஃபோ நகராட்சிப் பகுதியானது ஆல்ப்ஸ் மலைகளின் மலைப்பாங்கான பகுதிக்கும் அக்ரோ ரோமானோவின் தட்டையான பகுதிக்கும் இடையில் வடக்கு-வடகிழக்கு திசையில் சாய்வாக நீண்டுள்ளது. இது 1984 -ஆண்டில் நிறுவப்பட்ட கஸ்தெல்லி ரோமானி பூங்காவால் அடையாளபடுத்தப்படுகின்றது. இங்குள்ள மண் முழுவதும் பெப்பரினோ, டஃப் மற்றும் போஸோலானா போன்ற பொருட்களைக் கொண்ட எரிமலை மண்ணால் ஆனது. இங்குள்ள மக்களுக்கான குடிநீரானது அல்பானோ ஏரியிலிருந்து கிடைக்கின்றது. தொடக்கத்தில் அல்பானோ ஏரி என்றழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கஸ்தல் கந்தல்ஃபோ ஏரி என்று பரவலாக அழைக்கப்படுகின்றது. 


காலநிலை

மிதமான மத்தியதரைக் கடல் காலநிலையின் எல்லைக்குள் இருக்கும் இப்பகுதியானது, லேசான குளிர்காலத்தையும், இலையுதிர் காலத்தின் வெப்பநிலை வசந்த காலத்தை விட அதிகமாகவும் கொண்டது. கோடைகாலங்களில் இதமான தென்றல் காற்றையும் கொண்டுள்ளது. அல்பன் மலைகளின் பகுதி மற்றும் காஸ்தல் கந்தோல்போ பகுதிகளில் ஸ்தாவு எனப்படும் மேகங்களில் நீராவியைக் குறைக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.


வரலாறு

மாஸா சிசேரியானாவில் சேர்க்கப்பட்ட காஸ்தல் கந்தோல்போ நிலப்பகுதியானது இடைக்காலத்தில் இத்தாலியின் நோபிள் குடும்பமான Conti di Tuscolo என்பவருக்கு உடைமையாக இருந்தது. மேலும் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Santa Maria di Grottaferrata என்னும் துறவற நிறுவனத்திற்கு சொந்தமானதாகவும் இருந்துள்ளது. ஜெனோவா வம்சாவளியைச் சேர்ந்த கந்தோல்பி குடும்பத்தினர் தங்கள் பெயரைக் கொண்ட காஸ்ட்ரா எனப்படும் இராணுவ தளத்தை இங்கு அமைத்தனர். 1221 ஆம் ஆண்டில், இங்குள்ள கோட்டையைக் கைப்பற்றிய சவெல்லியினர் அதனை தங்களுடைய உடைமையாக மாற்றி, அதன்பின் 1389- ஆம் ஆண்டில் அதை காப்பிசூக்கி என்பவர்களிடத்தில் ஒப்படைத்தனர். மீண்டும் 1436 ஆம் ஆண்டில், கோட்டை மீண்டும் சவெல்லியின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. கர்தினால் மரியா ஜொவான்னி விட்டெலெச்சி அதை போர்கெட்டோ டி க்ரோட்டாஃபெராட்டா , அல்பானோ மற்றும் காஸ்டல் சவெல்லோவுடன் சேர்ந்து தரைமட்டமாக்க, 1482-ஆம் ஆண்டில், திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் காஸ்தல் கந்தோல்போவை வெல்லெட்ரி என்னும் இத்தாலிய சமூகத்திற்கு உடைமையாக வழங்கினார். இது மீண்டும் சவெல்லியினரால் சேதமடைந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பகுதியை திருப்பீடம் கைப்பற்றியது.


திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் ( 1585 - 1590 ) அவர்கள், பெர்னார்டினோ சவெல்லிக்கு ஆதரவாக காஸ்தல் கந்தோல்போவை டச்சி பதவிக்கு உயர்த்தினார் . இருப்பினும், பெரிய கடன்களை செலுத்துவதில் சவெல்லிக்கு ஏற்பட்ட நிலை காரணமாக, 1596 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று குடும்பத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பை திருப்பீடம் பெற்றுக்கொண்டது. திருத்தந்தை எட்டாம் கிளெமென்ட் அதே கோட்டையை 1604 மே 27, அன்று திருப்பீடத்தின் சொத்துக்களின் பட்டியலில் சேர்த்து அவை அந்நியப்படுத்த முடியாதவை அல்லது விற்க முடியாதவை என்று அறிவித்தார். திருத்தந்தையரின் கோடை கால விடுமுறை இல்லத்தின் தோட்டங்களை கால்நடையாகவும், சுற்றுச்சூழல் வாகனங்களிலும் பார்வையிடும் வாய்ப்பு இருப்பதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகத் திகழ்கின்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திருத்தந்தையரின் தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் திருத்தந்தையர்களின் உருவப்படங்களின் தொகுப்பு போன்றவற்றைப் பார்வையிடுவர். 2016 -ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்ட இவ்வில்லமானது மீண்டும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் கோடை விடுமுறை இல்லமாக புதுப்பொழிவு பெறுகின்றது


 மூலம் : வத்திக்கான் செய்திகள் (Vatican News)

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP