- 05 June, 2026
சிலுவை, உரோமையர்களின் கொலைக்கருவி. உரோமை அரசில் குற்றம் செய்தவர்கள், கலகம் மூட்டியவர்கள் என பெரும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை தான் சிலுவைச்சாவு. இது மிகவும் கேவலமான தண்டனை அதிலும் குறிப்பாக மிகக் கொடூரமான தண்டனை. சிலுவைச்சாவை பெற்றவர்கள் கடினமான சிலுவையை சுமந்துகொண்டு, கடுமையான வெயில் மற்றும் கரடுமுரடான பாதையில் சாட்டையடிகளோடு நடந்து செல்ல வேண்டும். அதன் பின் மூன்று ஆணிகளால் சிலுவையில் தொங்கவிடப்பட வேண்டும் இதை தான் இயேசு பெற்றார்.
இயேசு சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டவர் என்பது அனைத்து நற்செய்தி நூல்களும் நமக்கு தரும் பேருண்மை. சிலுவையானது நிலத்தில் ஊன்றப்பட்டு அதில் அறைந்து கொல்வார்கள். இரண்டு மரத்துண்டுகள் ஒன்றிணைக்கப்பட்டு சிலுவையானது செய்யப்படும். இச்சிலுவையானது பல நிலைகளில் செய்யப்பட்டது. +,T,X,Y போன்ற அடையாளங்களில் சிலுவைமரம் இருந்தது. இயேசுவை அறைந்து கொன்ற சிலுவையின் அடையாளம் '+'. பல்வேறு நாடுகள் குற்றவாளிகளுக்கு சிலுவை தண்டனையை கொடுத்தது. அவையாவன; எகிப்து கிரேக்கம், பெர்சியா மற்றும் உரோமை நாடு. 800 யூதர்களை மாமன்னன் அலெக்ஸாண்டர் சிலுவையில் அறைந்து கொன்றான். வாரூஸ் மற்றும் டைட்டஸ் போன்றவர்களும் குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
இப்படியாக குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட சிலுவை மரமானது நேர்மையான இயேசுவுக்கு கொடுக்கப்பட்டது. சிலுவைச்சாவு தான் மக்களை மீட்ககூடிய ஆயுதம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இதனால் தான் "சிலுவையை சுமக்காதவர் என் சீடராய் இருக்க இயலாது" என்று இயேசு சொல்லி வந்தார். "நான் பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தால் ஒழிய உங்களுக்கு மீட்பில்லை" எனவும் இயேசு தன் சீடர்களுக்கு சொல்லியிருந்தார்.
இந்த கொடூரமான சிலுவையை இயேசு தாமே சுமந்து கொண்டு சென்றார். (யோவா 19:17)
இயேசுவால் சிலுவையை சுமக்க இயலாததால் சீமோன் இயேசுவுக்கு உதவி செய்தார். (மத் 27:32)
யூத மக்கள் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் கத்தினர். (மத் 27:22) "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவா” என பிலாத்து கேட்டான். (யோவா 19:15)
இப்படியாக, இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று யூதமக்கள் போட்ட கூச்சலால் பிலாத்து அவரை சிலுவையில் அறைந்து கொலை செய்ய உத்தரவிட்டான். ஆக இயேசுவின் சிலுவைச்சாவால் அவமானத்தின் சின்னமான சிலுவையானது புனிதத்தின் சின்னமாக, மீட்பின் சின்னமாக மாறியது.
நான்
1. சிலுவையை ஏற்றுக்கொள்ள உண்மையான மன நிலையோடு இருக்கின்றேனா!
2. சிலுவை இருந்தால் துன்பம் என கருதி வீட்டிலிருந்து சிலுவையை வெளியே தூக்கி எறிந்திருக்கின்றேனா!
3. சிலுவை (துன்பம்) வேண்டாம் மகிழ்ச்சி (உயிர்ப்பு) மட்டும் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றேனா!
4. சிலுவை சுமக்காமல் மீட்பு இல்லை என்பதை உணர்ந்து சிலுவையின் புனிதத்தை காப்போம்.
- அருள்பணி குலசை பெலிக்ஸ் HGN
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP