image

நற்கருணைப் பவனிகளைப் போணிக்காக்க நம்பிக்கையாளர்களை ஊக்குவித்த திருத்தந்தை

வத்திக்கான், ஜூன் 4, 2026: திருத்தந்தை பதினான்காம் லியோ, நம்பிக்கையாளர்கள் நற்கருணைப் (Corpus Christi) பவனிகளின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு ஊக்குவித்துள்ளார். இவை நற்கருணை மீது மக்கள் கொண்டுள்ள பொதுவான பக்திக்கு ஒரு முக்கிய வெளிப்பாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வாரம் திருஅவை கொண்டாடும் கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, "பல நகரங்கள் மற்றும் நாடுகளில் வீதிகளில் நடைபெறும் நற்கருணை பவனிகள், மக்கள் நற்கருணையின் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாகும். எனவே, கிறிஸ்தவ நம்பிக்கைக்குப் பொதுச் சான்றளிக்கும் இந்த அழகான நிகழ்வைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்" என்றார்.


இந்த பாரம்பரியத்தில் கலந்துகொள்ளுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, "நற்கருணையில், நமக்காகப் உடைக்கப்பட்டு கொடுக்கப்பட்ட அப்பமாகிய இயேசுவை நாம் தியானிக்கிறோம்" என்று நினைவூட்டினார்.


நம்பிக்கையாளர்களுக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, திருத்தந்தை பதினான்காம் லியோ, மத்திய கிழக்கில் பணியாற்றும் அருள்பணியாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் தனது ஆன்மீக நெருக்கத்தை உறுதிப்படுத்தினார்.


"உங்கள் திருப்பணிகளுக்கும், உங்கள் நாடுகளின் நம்பிக்கையாளர்களுக்கும் எனது செபங்களாலும் ஆசீரினாலும் நான் துணைநிற்கிறேன்" என்று அவர் கூறினார்.


அவர்களது மறைப்பணியை ஊக்குவித்த அவர், "கடவுளுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும், அவருடைய அமைதிக்காகவும் ஏங்குபவர்கள் அனைவருக்கும் நீங்கள் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழுங்கள்" என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.


Courtesy: Vatican News

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP