image

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி!

சென்னை | செப்டம்பர் 29, 2025:


தமிழகத்தில் கடந்த 27-09-2025 அன்று, கரூரில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி நம் இதயங்களுக்குத் துயரத்தை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் உயிரிழந்த பரிதாபம் மிகுந்த வேதனையைத் தருகிறது.


உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தமிழக ஆயர் பேரவை இறைவேண்டல் கலந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்னும் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகள் விரைவில் நலம் பெறவும் கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறோம்.


இந்த எதிர்பாராத பெருந்துயர் நிகழ்வு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. இறைவேண்டல்கள் மூலம் உங்கள் குடும்பங்களுக்கு எங்கள் நெருக்கத்தை உறுதியளிக்கிறோம். ஆறுதல் அருளும் இறைவன், இறந்தவர்களுக்கு நிலை வாழ்வை வழங்குவாராக. துயரமான தருணத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் வேளையில், உறவினர்களின் இழப்பினால் துயருறும் குடும்பங்கள் அமைதியும் ஆறுதலும் வலிமையும் நம்பிக்கையும் பெற்றுக்கொள்ள இறைவனை இறைஞ்சுகிறோம். காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் மற்றும் ஆன்ம நலம் பெற்றிட எங்கள் இறைவேண்டல்களில் அவர்களை நினைவுகூருகிறோம்.


மீண்டுமாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் அனைவருக்கும் தமிழக ஆயர் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழக ஆயர் பேரவை

சென்னை மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP