- 28 July, 2026
இராமநாதபுரம், ஜூலை 28, 2026: புனிதர்கள் சுவக்கின் மற்றும் அன்னாள் ஆகியோரின் திருவிழாவைக் கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் புனித செபமாலை அன்னைக் கோவில் பங்கில் முதியோர் மற்றும் தாத்தா-பாட்டியர் விழா நேற்று முன்தினம் (ஜூலை 26) உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்ற இந்தச் சிறப்புத் திருப்பலியை, அப்பங்கின் 170 மறைக்கல்வி மாணவ, மாணவியர் முழுமையாக ஒருங்கிணைத்துச் சிறப்பித்தனர்.
சிறார்களின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு
திருப்பலியின் தொடக்கத்தில், சிறார்கள் அனைவரும் இதய வடிவிலான அட்டைகளில் (Chart Paper) தங்கள் தாத்தா, பாட்டியரின் பெயர்களை எழுதி, அதனைப் பதாகைகளாக ஏந்தியபடி வருகைப்பாடல் பாடி அருள்பணியாளர்களுடன் பலிபீடம் நோக்கி பவனியாக வந்தனர். பின்னர் அந்தப் பதாகைகளை பலிபீடத்திற்கு முன்பாக வரிசையாக வைத்து இறைமக்களுடன் இணைந்து சிறப்பு இறைவேண்டல் செய்தனர். இந்தச் சிறப்புத் திருப்பலியை மறைவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான அருள்பணி. சிங்கராயர் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. மனோஜ் சேவியர் ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர்.
முதியோர்களின் வாழ்க்கை, நம்பிக்கை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் திருவிவிலியம், ஊன்றுகோல், மரத்தின் வேர் மற்றும் எரியும் மெழுகுதிரி ஆகியவை நன்றியின் அடையாளமாகக் காணிக்கையாகச் செலுத்தப்பட்டன.
வாழும் தெய்வங்களாகப் போற்றப்பட்ட முதியோர்கள்
திருவிருந்திற்குப் பிறகு முதியோர்கள் சார்பாக திருமதி. எமரன்சியா அவர்கள், "அன்புச் செல்லங்களே..." எனத் தொடங்கி சிறார்களுக்காகச் சிறப்பு இறைவேண்டல் செய்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். திருப்பலியின் நிறைவாக, தாத்தா-பாட்டியரின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் "நல்லவை எல்லாம் சொல்லித்தரும் தாத்தா-பாட்டியரே..." என்ற வாழ்த்துப் பாடலைச் சிறுவர்கள் பாடிச் சமர்ப்பணம் செய்தனர். மேலும், முதியோர்களின் நெற்றியில் சந்தனமிட்டு, முத்தமிட்டு அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மறையுரையின் போது, 'கண்ணுக்கு முன்னால் வாழும் நடமாடும் தெய்வங்களே நம் வீட்டில் உள்ள முதியோர்கள்' எனப் பகிரப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருப்பலியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், சிறார்கள் முதியோர்களின் பெயர்களைத் தாங்கி வந்த காட்சி தமக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக இந்த வழிபாடு தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, அனைவரையும் ஒரு வலுவான உறவுப் பிணைப்பிற்குள் கொண்டு வந்ததாகப் பொதுமக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
உறவுகளைப் புதுப்பிக்க வலியுறுத்திய பங்குத்தந்தை
இந்த நெகிழ்வான விழா குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் பங்குத்தந்தை தனது ஆழமான கருத்தைப் பதிவு செய்தார்:
"இந்த நிகழ்வை முழுமையாக மாணவ, மாணவியரான சிறார்களை வைத்தே செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். இன்று அவர்கள் வழியாகத்தான் உறவு நிலைகளைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது. பலருக்கு இந்த உறவுகளின் அருமை தெரிவதில்லை. ஆங்கில வார்த்தைகளில் இல்லாத உணர்வுபூர்வமான பிணைப்பு, தமிழ் மொழியில் நாம் அழைக்கும் 'அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி' என்ற வார்த்தைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த உணர்வை மீண்டும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சின்னப் பிள்ளைகளை வைத்து இந்த முயற்சியை எடுத்தோம். அவர்களாகவே முதியோர்களிடம் சென்று முத்தம் கொடுத்து, நெற்றியில் சந்தனம் வைத்து வாழ்த்தியதைப் பார்க்கும் போது, அந்த இடத்தில் உண்மையாகவே ஒரு தெய்வீகப் பிரசன்னம் இருப்பதை உணர முடிந்தது."
தாத்தா, பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் இதுபோன்ற அர்த்தமுள்ள விழாக்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே இறைமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
- அருள்பணி. A. மனோஜ் சேவியர் MIC,
உதவிப் பங்குப்பணியாளர்,
இராமநாதபுரம்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP