image

எருசலேமில் குருத்து ஞாயிறு திருப்பலிக்குத் தடை

எருசலேம், மார்ச் 30, 2026: எருசலேமில் உள்ள திருக்கல்லறை ஆலயத்தில் (Church of the Holy Sepulchre), குருத்தோலை ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றவிடாமல் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிசபாலா மற்றும் பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் பிரான்செஸ்கோ ஐயெல்போ ஆகியோரை இஸ்ரேலிய காவல்துறையினர் தடுத்துள்ளனர். இது ஒரு "தீய விளைவுகளை உண்டாக்கும் முன்மாதிரி" என்று திருஅவைத் தலைவர்கள் விவரித்துள்ளனர்.


இஸ்ரேலில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்களின் கூட்டு அறிக்கையின்படி, புனித பூமியில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரு உயர்மட்ட திருஅவை அதிகாரிகளும் பொது ஊர்வலமாகச் செல்லாமல், தனிப்பட்ட முறையில் புனிதத் தலத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் பின்வாங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டனர்.


பல நூற்றாண்டுகளில் முதல்முறையாக, திருஅவையின் தலைவர்கள் திருக்கல்லறை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலியை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கொதா மற்றும் அவர் உயிர்த்தெழுந்த கல்லறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக பாரம்பரியமாக நம்பப்படும் இந்தத் தலம், கிறிஸ்தவத்தின் மிக புனிதமான இடங்களுள் ஒன்றாகும்.


இந்த நடவடிக்கையை "முற்றிலும் நியாயமற்றது" மற்றும் "பொறுத்தமற்றது" என்று திருஅவை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். மேலும், புனித பூமி மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்காக தங்களின் "ஆழ்ந்த துயரத்தை" அவர்கள் வெளிப்படுத்தினர். கிறிஸ்தவ நாட்காட்டியின் மிக புனிதமான நாட்களில் ஒன்றில் வழிபாடு தடுக்கப்பட்டது, நம்பிக்கையாளர்களை ஆழமாக பாதித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


தற்போதைய மோதல் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், மதச் செயல்பாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் பின்னணியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பொதுக் கூட்டங்களை ரத்து செய்தல், திருப்பயணிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வழிபாடுகளை நேரலை செய்தல் போன்ற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு திருஅவைத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்த போதிலும், இந்த சமீபத்திய விரும்பத்தகாத செயல்கள் கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.


இந்த வார தொடக்கத்தில், ஒலிவ மலையிலிருந்து நகருக்குள் இயேசுவின் வருகையை நினைவுறுத்தும் பாரம்பரிய குருத்தோலை ஞாயிறு பவணியை ரத்து செய்வதாக கர்தினால் பிசபாலா ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும், எந்த பவணியும் நடைபெறாத நிலையிலும் அருள்பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை திருஅவை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறினர்.


மோதல் தொடங்கியதிலிருந்து தாங்கள் பொறுப்புடன் செயல்பட்டு, கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி வருவதாக திருஅவைத் தலைவர்கள் தங்களது அறிக்கையில் வலியுறுத்தினர்.


புனிதத் தலங்களுக்கான மிக உயர்ந்த திருஅவைப் பொறுப்புகளைக் கொண்ட கர்தினால் மற்றும் காஸ்டோஸ் (Custos) ஆகியோர் ஆலயத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, மத சுதந்திரம் மற்றும் புனிதத் தலங்களுக்கான அணுகலை நிர்வகிக்கும் நீண்டகால ஏற்பாடுகளை மீறும் கடுமையான செயலாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.


புனித வாரத்தின் போது உலகம் முழுவதிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்கள் எருசலேமை நோக்குகிறார்கள் என்பதால், இந்தச் சம்பவம் உலகளாவிய திருஅவைக்கு மிகவும் முக்கியமானது என்று எருசலேமின் இலத்தீன் மறைமாவட்டமும் புனித பூமியின் காவல் அமைப்பும் (Custody of the Holy Land) தங்களது வருத்தத்தை மீண்டும் பதிவு செய்துள்ளன.


Source : Aleteia

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP