image

உயிர்ப்புப் பெருவிழா: காட்சி தந்த மாட்சி

நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாகவும் ஆணிவேராகவும் இருப்பது நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு ஆகும். சிலுவையில் மரித்த இயேசு உயிர்த்தெழுந்ததால் தான் நமது நம்பிக்கை உயிரோடு இருக்கிறது. அதனால் தான் நாம் “அல்லேலூயா மக்கள்” என்று அழைக்கப்படுகிறோம்.


காட்சி தந்த சாட்சி

இன்றைய முதல் வாசகம் இயேசுவின் உயிர்ப்பை உலகிற்கு அறிவித்த சாட்சிகளை நினைவூட்டுகிறது. யூத மரபின்படி ஒரு உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு சாட்சிகள் அவசியம். அதனால் தான் பேதுரு, “இறந்தோரிடமிருந்து உயிர்த்த பின் அவரோடு உண்டும் குடித்தும் இருந்த நாங்கள் சாட்சிகள்” என்று துணிவோடு அறிவிக்கிறார்.


மூன்று ஆண்டுகள் இயேசுவுடன் வாழ்ந்த சீடர்கள், அவரின் செயல்களையும் அன்பையும் நேரில் கண்டவர்கள். அந்த காட்சிகள் சாட்சிகளாக மாறின; அந்த சாட்சிகளே பின்னர் நற்செய்தியாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது. இன்றும் இறைவார்த்தையின் மூலம் ஆண்டவர் நமக்குக் காட்சிகளைத் தருகிறார். அந்த அனுபவம் நம்மையும் அவரின் சாட்சிகளாக மாற அழைக்கிறது.


சாட்சி தந்த மாட்சி

இன்றைய இரண்டாம் வாசகத்தில், உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தை பெற்ற பவுல், தனது வாழ்வின் மூலம் கிறிஸ்துவின் மாட்சியை அறிவிக்கிறார். “நாம் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள்” என்று அவர் தைரியமாகச் சொல்கிறார்.


கொலோசேயர்கள் மண்ணுலக விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தியவர்கள். அதனால் பவுல், “விண்ணகத்தைச் சார்ந்தவற்றை நாடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார். உயிர்த்த கிறிஸ்துவை நம்பும் நாம், உலக விஷயங்களில் மட்டும் அல்லாமல், கடவுளின் மாட்சியை வெளிப்படுத்தும் வாழ்க்கையை வாழ வேண்டும்.


மாட்சி தந்த இறையாட்சி

இன்றைய நற்செய்தி நமக்கு இன்னும் ஆழமான உண்மையை கூறுகிறது. உயிர்ப்பை கொண்டாடுவது மட்டும் கிறிஸ்தவ வாழ்வு அல்ல; அந்த உயிர்ப்பின் வல்லமையால் இறையாட்சியின் கருவிகளாக மாற வேண்டும்.


ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியில் உயிர்ப்பை கொண்டாடுவது ஒரு கடமை. ஆனால் அதைவிட முக்கியமானது, இயேசு விரும்பும் விண்ணக மதிப்புகளை இந்த மண்ணுலகில் வாழ்வது.

அன்பு, மன்னிப்பு, சமாதானம், நீதியுடன் வாழும் போது தான் நாம் இறையாட்சியை இந்த உலகில் கட்டியெழுப்புகிறோம்.



நிறைவுச் சிந்தனை

உயிர்த்த ஆண்டவரின் காட்சிகளை கண்டவர்கள் சாட்சிகளானார்கள். சாட்சிகளானவர்கள் அவரின் மாட்சியை உலகிற்கு அறிவித்தார்கள். அந்த மாட்சி இறுதியில் இறையாட்சியை உருவாக்கும் அழைப்பாக மாறுகிறது.


ஆகையால் இந்த உயிர்ப்புப் பெருவிழா நமக்கு ஒரு அழைப்பு:

உயிர்த்த கிறிஸ்துவின் சாட்சிகளாகவும், அவரது மாட்சியை வெளிப்படுத்துவோராகவும், இந்த உலகில் இறையாட்சியை கட்டியெழுப்புவோராகவும் வாழ்வோம்.


அல்லேலூயா! ஆண்டவர் உண்மையாக உயிர்த்தெழுந்தார்.



- அருள்பணி K.அருள் ஜேசுதாஸ்

செயலர் , திருவழிபாட்டுப் பணிக்குழு

சென்னை மயிலை உயர்மறை மாவட்டம்

அலைபேசி எண் :+91 97899 85013

k.aruljesudoss@gmail.com

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP