- 06 April, 2026
திருச்சி | செப்டம்பர் 22, 2025:
21.09.2025, ஞாயிறு அன்று மதியம் 1.00 மணி முதல் 6.00 மணிவரை திருச்சி நல்லாயன் நிலையத்தில் தன்னார்வ வேதியர்கள் கொண்டாடிய, திருவிவிலியத் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற தன்னார்வ வேதியர்கள் 7 அணிகளாகப் பிரிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணிவரை "எதிர்நோக்கின் அடித்தளம் திருவிவிலியம்" என்னும் தலைப்பில் விவிலிய அரியணையேற்றப் போட்டி நடைபெற்றது. அழகிய, அர்த்தமுள்ள, அலங்கார வேலைப்பாடுகளோடு திருவிவிலியத்தை அரியணையேற்றி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு விவிலிய அடிப்படையில் அமைந்த பஜன் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளின் மதிப்பீட்டாளர்களாக அருள்சகோதரி லூர்ட்ஸ் ம.ஊ.ச. அவர்களும், ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. சேவியர் சற்குணம் அவர்களும் செயல்பட்டனர்.
பேராலயத்திலிருந்து அனைவரும் தங்கள் கைகளில் திருவிவிலியத்தையும், இறைவார்த்தைகள் எழுதப்பட்ட பதாகைகளைபும் உயர்த்திப் பிடித்தபடி, இறைவார்த்தையின் முக்கித்துவத்தை உணர்த்தும் பாடல்கள் பாடிக்கொண்டே, நல்லாயன் நிலையத்திற்குப் பவனியாக வந்தனர். பவனியின் இறுதியில் திருவிவிலியம் பல்லக்கில் வைத்து ஆடம்பரமாக எடுத்துவரப்பட்டது.
தொடர்ந்து நல்லாயன் நிலையத்தில் நடைபெற்ற இறைவார்த்தை வழிபாட்டில் இறைவார்த்தைக்கு தீப, தூப, மலர்களால் அஞ்சலி செய்யப்பட்டு, தொடக்க செபம் ஜெபிக்கப்பட்டது. பின் இறைவார்த்தையை மையப்படுத்திய பாடல்கள், மன்னிப்பு மன்றாட்டுகள், இறைவார்த்தை முழக்கம், இறைவார்த்தைப் பகிர்வுகள், நம்பிக்கையாளர் மன்றாட்டுகள், விவிலியக் காணிக்கை, ஆகியவை இடம் பெற்றன. இவை அனைத்தையும் தன்னார்வ வேதியர்களே தயாரித்து நெறிப்படுத்தினர்.
பின்பு பங்கேற்பாளர்கள் அனைவரது திருவிவிலியமும் செயலர் அருள்பணி. மரியசூசை அவர்களால் செபித்து, அர்ச்சிக்கப்பட்டது.
மாலை புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் அதிபர் அருள்பணி. டைனிசியஸ் லாரன்ஸ் அவர்கள் விவிலியத்தில் யூபிலி பற்றியும், விவிலிய வாசிப்பு முறைகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
பின்பு கடந்த மாதம் தன்னார்வ வேதியர்களுக்கு நடைபெற்ற யூபிலிக் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும், இவ்விழாவில் நடைபெற்ற திருவிவிலிய அரியணை ஏற்றப் போட்டி, விவிலியப் பஜன் பாடல் போட்டிகளுக்கான பரிசுகளும் செயலரால் வழங்கப்பட்டன. முதல் மூன்று பரிசுகள் மட்டுமல்லாமல், போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்பட்டன.
விவிலியத்தின்மீது ஆர்வம் கொண்டு, இறைவார்த்தையை வாசிக்கவும் வாழவும் அனைவருக்கும் இந்த திருவிவிலியத் திருவிழா உறுதுணையாக அமைந்திருந்தது.
செய்தியாளர்: Catholic Connect Reporter
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP