image

முன்மொழியப்பட்ட FCRA திருத்த மசோதா குறித்த கவலைகளுக்கு மத்தியில், CBCI தேசிய செப நாளுக்கு அழைப்பு விடுத்துள்ளது

புது தில்லி, ஜூன் 17, 2026: இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI), ஜூன் 28-ம் தேதியை தேசிய செப நாளாக (National Day of Prayer) நாடு முழுவதும் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA) குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், நாட்டிற்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும், திருஅவையின் சேவைப் பணிக்காகவும் இறைவனிடம் வேண்டுமாறு கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளது.


ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருக்கு எழுதிய சுற்றறிக்கையில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் அந்தோணி பூலா அவர்கள், பாராளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தார்.


இந்தியாவெங்கும் உள்ள ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் தொண்டு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைப் பணிகளுக்கு இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று கர்தினால் குறிப்பிட்டார். அன்பு, நீதி மற்றும் கருணை ஆகிய நற்செய்தி விழுமியங்களின் வெளிப்பாடாக, இந்த சேவைகள் நீண்டகாலமாக ஏழைகளுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் பணியாற்றி வருகின்றன என்பதை அவர் வலியுறுத்தினார்.


இந்த முன்னெடுப்பை ஒரு ஆன்மீக மற்றும் ஜனநாயக ரீதியான எதிர்வினையாக விவரித்த கர்தினால் பூலா, நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செபிக்கவும், பிற கிறிஸ்தவ சபைகளுடன் ஒற்றுமையுடன் செயல்படவும் அழைப்பு விடுத்தார். ஜூன் 28 அன்று திருப்பலி கொண்டாட்டங்களின் போது சிறப்பு செபங்களை ஏற்பாடு செய்யவும், நாட்டிற்காகவும், பொதுத் தலைவர்களுக்காகவும், திருச்சபையின் சேவைப் பணிக்கான சுதந்திரத்திற்காகவும் வேண்டுதல் செய்யவும் மறைமாவட்டங்கள், பங்குகள், மத சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார்.


இந்த செப நாளின் ஒரு பகுதியாக நற்கருணை ஆராதனை, செபமாலை, செப வழிபாடுகள் மற்றும் தன்னார்வ விரதங்களை மேற்கொள்ளவும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பரிந்துரைத்துள்ளது. ஒருங்கினைந்த கிறிஸ்தவ உணர்வுடன், பிற கிறிஸ்தவ சமூகங்களுடன் இணைந்து கூட்டு செபக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய உள்ளூர் திருஅவைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.


கிறிஸ்துவால் நமக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளைத் தொடர, இறைவனின் சேவைக்காக நம்மை உறுதிப்படுத்தும் நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் செபம் நம்மை இணைக்கிறது என்று கர்தினால் பூலா குறிப்பிட்டார். பிலிப்பியர் திருமுகத்தில் புனித பவுல் கூறிய அறிவுரையை மேற்கோள் காட்டி, எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம், எதிலும் செபம் மற்றும் மன்றாட்டுகளின் வழியாக உங்கள் வேண்டுதல்களை நன்றிப் பெருக்குடன் இறைவனிடம் தெரியப்படுத்துங்கள் என்று அவர் எழுதினார்.


இந்தச் செப முன்னெடுப்போடு, முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பாக அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் கவலைகளை வெளிப்படுத்தவும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மசோதா குறித்தும், திருஅவையின் பணிகளில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட மக்களின் கையொப்பங்களுடன் கூடிய மனுக்களைத் தயாரிக்க மறைமாவட்டங்கள், பங்குகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம்; மேலும் அவர்கள் இத்தகைய செபக் கூட்டங்களில் பங்கேற்கவும் அழைக்கப்படலாம்.


அமைதி, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொது நலனுக்காக திருஅவை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தச் சுற்றறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேவேளையில், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் பொறுப்புள்ள குடிமக்களாக கத்தோலிக்கர்கள் செயல்படவும் ஊக்குவிக்கிறது.


தேசிய செப நாளில் அனைவரும் பெருமளவில் பங்கேற்பதை உறுதிசெய்ய, இந்தச் சுற்றறிக்கையைத் தேவையான மொழிகளில் மொழிபெயர்த்து, ஜூன் 21 அன்று அனைத்து ஆலயங்கள் மற்றும் திருப்பலி நடைபெறும் இடங்களில் வாசிக்குமாறு கர்தினால் பூலா உத்தரவிட்டார்.


இந்தியாவின் அரசியான புனித கன்னி மரியாவின் பரிந்துரைக்கு இந்தியாவையும், இந்தியத் திருஅவையையும் ஒப்படைத்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, நாட்டின் எதிர்கால சேவைப் பணிக்காக இந்த செப நாளில் நம்பிக்கையாளர்கள் முழு மனதுடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.


By Catholic Connect Reporter

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP