image

மதுரை உயர் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர் பொறுப்பேற்பு

மதுரை | ஆகஸ்ட் 4, 2025:


கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர் மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராக மேதகு அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்றார்.


இதற்கு முன்பு பேராயராக இருந்த மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பாளையங்கோட்டை ஆயராக இருந்த மேதகு அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் மதுரை உயர் மறைமாவட்டத்தின் பரிபாலகராக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார். தற்போது மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் திருத்தந்தை அறிவித்ததையடுத்து ஆகஸ்ட் 2 அன்று அதற்கான பொறுப்பேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.


இதற்கான விழா ஞானஒளிபுரம் புனித பிரிட்டோ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக ஞானஒளிபுறம் புனித வளனார் ஆலயத்தில் திருத்தந்தையின் இந்தியாவுக்கான சிறப்பு பிரதிநிதி மேதகு லியோபோல்டோ ஜிரல்லி அவருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டு பின்னர் பேராயர்கள், ஆயர்கள், அனைவரும் அங்கிருந்து புனித பிரிட்டோ பள்ளி வரை பவனியாக அழைத்து வரப்பட்டார்கள்.


திருத்தந்தையின் இந்திய பிரதிநிதியாகிய மேதகு லியோ போல்டோ ஜிரல்லி புதிய பேராயரிடம் செங்கோல் வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து மதுரை உயர்மறை மாவட்ட குருக்கள் புதிய பேராயரிடம் ஆசி பெற்றார்கள். நிகழ்ச்சியில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, பாண்டி கடலூர் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து ஆயர்கள், அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஆகிய அனைவருடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.


பொறுப்பேற்பு வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து புதிய பேராயருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருத்தந்தையின் தூதர் ஆங்கிலத்தில் வாழ்த்துரை வழங்க அதனை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்கள். தொடர்ந்து பாளையங்கோட்டை மறை மாவட்டத்தின் முதன்மை குரு வாழ்த்துரை வழங்கினார். புதிய பேராயரின் ஏற்புரையைத் தொடர்ந்து மதுரை உயர் மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி. செபாஸ்டின் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.


இந்நிகழ்வில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ், பா.ஜ.க.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்குக்கான ஏற்பாடுகளை மதுரை உயர்மறை மாவட்டத்தின் பொறுப்பாளராகிய அருட்தந்தை ஜெரோம் எரோணிமஸ் ஒருங்கிணைத்தார்.


செய்தியாளர்: அருள்பணி. அலெக்ஸ் ஞான ராஜ்

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP